மணிமேகலை எனக்கும் மகள்தான்….! – இயக்குநர் அமீர்

achamillai-achamillai-producer-ameer-and-director-muthu-gopal-stills-002

அன்பானவர்களுக்கு,
நேற்றைய தினம் எனது வாட்ஸ்அப் பக்கத்தில் பதிவு ஒன்று வந்தது, அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி காணவில்லை என்றும் அந்த பெண்ணின் புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் அந்தப் பெண்ணுடைய தந்தையின் சிறு கோரிக்கை உள்ளிட்டவை அதில் இருந்ததைக் கண்டேன். முதலில் இந்த தகவல் உண்மைதானா இதை பிறரிடம் பகிரலாமா? வேண்டாமா?என என் மனதிற்குள்ளே யோசித்துக்கொண்டிருந்தேன்.
சில வினாடிகள் கழித்து இது போன்ற தகவல்களில் என்ன பொய் கலந்திருக்க முடியுமென்றும் ஒரு வேளை இந்த தகவல் உண்மையாக இருந்து ஒரு சிறு மாணவியின் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாதென்றும்,
71வது சுதந்திர தின விழாவை கொண்டாட பள்ளிக்குச் சென்ற மாணவியை பட்டப்பகலிலேயே கற்பழித்து நாசம் செய்கிற கயவர்கள் வாழுகின்ற நாட்டிலே எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவும் அதிகம் யோசிக்காமல் உடனடியாக அந்த தகவலை நான் எனது வாட்ஸ்அப் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பி வைத்தேன்.
அதனை தொடர்ந்து எனது வாட்ஸ்அப் பக்கத்தில் என்னுடைய முந்தைய எந்த பதிவிற்கும் இல்லாத அளவிற்கு உடனடியாக எனக்கு நிறைய பதில்களும், அது குறித்த விபரங்களும் எனக்கு வந்து சேர்ந்தன.
அதில் சிலர் எங்களால் ஆனதை செய்கிறோம் என்றும் அந்தப் பெண் மீண்டும் தன் பெற்றோரிடம் வந்து சேர இறைவனை பிரார்த்திப்பதாகவும் பதில் அளித்திருந்தனர்.
இன்னும் சிலர் இது பழைய செய்தி என்றும் எனக்கு நினைவூட்டினர்.
குறிப்பாக இயக்குநர் திரு. வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் திரு. சுகுமாறன் போன்றவர்களும் இதில் அடங்குவர்.
மேலும் இயக்குநர் திரு. கௌதமன் அவர்கள் அந்த பதிவில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அந்த மாணவி திரும்ப கிடைத்துவிட்டாள் என்கிற தகவலையும் அவரின் பெற்றோரிடம் பேசியதாகவும் அலைபேசி வாயிலாக எனக்கு தெரிவித்தார்.
பகிர்ந்த அனைவருக்கும்  பங்களிப்பு செய்த அனைவருக்கும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அதே நேரத்தில் சிலர் என்னிடம் அலைபேசி வாயிலாகவும் பதில் பதிவாகவும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதில் குறிப்பிடப்படுவது என்னவென்றால் இது போன்ற தகவல்களை உறுதி செய்யாமல் யாருக்கும் அனுப்ப வேண்டாமென்று எனக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். நன்றி! தங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
நான் செய்த ஒரே தவறு, அந்த பதிவில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு அந்த செய்தியை உறுதி செய்யாமல் இருந்தது மட்டுமே. எனக்கு வந்த அந்த பதிவை பார்த்த நேரத்தில் அந்த நிமிடத்தில் எனக்கு அது தோன்றவில்லை காரணம் நானும் பெண் பிள்ளையை பெற்ற காரணத்தினாலோ என்னவோ என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் ஒருவர் என்னிடம் பேசும் போது “தொலைந்தது தங்கள் மகளா?  என கேட்டார்.
உடனே நான் அது எனக்கு வாட்ஸ்அப்பில் வந்த பதிவு அதனை நான் forward செய்தேன்” என்று பதிலளித்தேன்.
அதற்கவர் “இல்லை அந்த பதிவில் my daughter என்று இருந்ததே அதனால் கேட்டேன் என்றும் இதுபோல் உறுதி செய்யப்படாத தகவலை யாருக்கும் அனுப்ப வேண்டாம்”என எனக்கு அறிவுரை வழங்கினார்.
புகைப்படத்தில் இருக்கும் மாணவி நெற்றியில் திலகம் வைத்திருப்பதை பார்த்த பிறகும் அந்த மாணவியின் பெயர் மணிமேகலை என்று குறிப்பிட்டிருந்த பின்பும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்த அலைபேசி எண்கள் என்னுடையது இல்லை என்று தெரிந்த பின்பும் என்னிடம் அவர் அப்படி கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
அவர் என்னிடம் அப்படி கேட்டதில் என்ன சூட்சமம் இருந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.
இன்னுமொருவரோ, ஒரு குரூப்பில் இருந்து கொண்டு இது போன்ற செய்திகளை blind ஆக நம்பி பதிவிட வேண்டாம் என்றும் எனக்கு சொல்லியிருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நெற்றியில் திலகமிட்டிருந்தாலும் மணிமேகலை என்னும் அந்த மாணவி எனக்கும் மகள்தான்.
இது போன்ற விஷயங்களில் நான் அறிவாளியாக இருப்பதை விட ஒரு தந்தையாக, ஒரு சாதாரண மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.
இதன்பிறகும் இது போல் வெறும் புகைப்படமும் செய்தியும் வந்தாலும் கூட அதனையும் நான் அனைவருக்கும் பகிர்வேன்.
அதனால் நான் முட்டாள் ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை. மேலும், எத்தனையோ வெற்று செய்திகளை, நாம் சார்ந்திருக்கும் மதத்தின் பெருமைகளை, நாம் சார்ந்திருக்கும் கட்சிகளின் பெருமைகளை, தலைவர்களின் பராக்கிரமங்களை பறை சாற்றும் செய்திகளை பதிவிடுவதை விட இது ஒன்றும் குறைந்ததாக நான் கருதவில்லை.
ஆகையால் என்னிடமிருந்து இது போன்ற செய்திகளை தவிர்க்க தங்களது குரூப்பில் இருந்தோ அல்லது தங்களது வாட்ஸ்அப் பக்கத்தில் இருந்தோ என்னை நீக்கிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                              அன்புடன்
                          இயக்குநர் அமீர்