விவேகம் படத்துக்கு வித்தியாசமாக பப்ளிசிட்டி

vivegam1

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படம் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியாகிறது.

விவேகம் படத்தை திட்டமிட்டதில் தொடங்கி இப்போதுவரை அந்தப் படத்துக்கு ஊடகங்கள் மிகப்பெரிய ஆதரவையும் இலவச விளம்பரங்களையும் அளித்து வருகின்றன.

ஆனால் விவேகம் படத்திற்காக இதுவரை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்படவே இல்லை.

படத்தின் புரமோஷனுக்கு அஜித் வரமாட்டார்.

எனவே அவர் இல்லாமல் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினால் அஜித் வராதது பற்றி மீடியாக்கள் நிச்சயமாக கேள்வி எழுப்பும்.

இந்த கேள்வியை எதிர்கொள்வதில் உள்ள தர்மசங்கடம் காரணமாகவே விவேகம் படத்துக்கு பிரஸ்மீட் நடத்தப்படவில்லை.

அதே சமயம், ஊடகங்களின் உதவி இல்லாமல் விவேகம் படத்தை வெற்றியடைய வைக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து வேறு வழியில் விவேகம் படத்துக்கு பப்ளிசிட்டி செய்து வருகின்றனர்.

அதாவது, விவேகம் படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அஜித்தை புகழ்வதுபோல் செய்தி அறிக்கையை (பிரஸ்ரிலீஸ்) தயார் செய்து ஊடகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

லேட்டஸ்டாக, ‘Casino Royale’, ‘300: Rise Of An Empire’, ‘The Transporter Refunded’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞரான சர்ஜ் க்ரோசோன் கஜின் ‘விவேகம்’ படம் குறித்தும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்தும் பாராட்டிச் சொன்னதாக ஒரு பிரஸ் ரிலீஸ் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘‘விவேகம்’ உலகத்தரம் வாயந்த ஒரு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதித்ததை பெருமையாக கருதுகிறேன்.

இந்த படத்தில் அஜித்தின் அணியான ஐவரில் ஒருவராக நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்த கதாபாத்திரத்திற்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு நடிக்க வாய்ப்பளித்தார்.

இயக்குனர் சிவாவின் காட்சிப்படுத்ததல் முறையும், அவரது தெளிவும் என்னை கவர்ந்தது.

அஜித் சாருடன் நடித்தது குறித்து கூறுவதென்றால் இந்த படத்தில் நான் அவருடன் நடித்து வீட்டுக்கு திரும்பிய பிறகு தான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதை தெரிந்துகொண்டேன். படப்பிடிப்பில் அவர் அவ்வளவு எளிமையாக இருப்பார். அவர் செய்த ஆக்‌ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழத்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி! படப்பிடிப்பு இடைவேளைகளில் அவருடன் நடந்த உரையாடல்கள் எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். உலகத்தரத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதெல்லாம் சர்ஜ் க்ரோசோன் கஜினுக்கு தெரியுமா என்பதுதான் நம்ம சந்தேகம்.

– ஜெ.பிஸ்மி