ஃபெப்சி உடன் ஒப்பந்தம்…. – விஷாலுக்கு எதிராக அணிதிரளும் தயாரிப்பாளர்கள்

producer-council_vishal-stills-011

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (ஃபெப்சி) இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதனால் காலா, மெர்சல் உட்பட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் இன்று முதல் துவங்க உள்ளது.

இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கத்தினர் ஃபெப்சி உடன் சமரசம் செய்து கொண்டதை பல தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து, விஷால் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் விஷால் அணியில் போட்டியிட்டு நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

குறிப்பாக, தங்கராஜ் (சுந்தரா ட்ராவல்ஸ்), ஜெமினி ராகவா (வைதேகி பட தயாரிப்பாளர்), இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான எஸ் எஸ் குமரன், இயக்குநர் பிரவீண்காந்த் ஆகியோர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்கள் எதிர்ப்பை மீறி ஃபெப்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பிரவீண்காந்த் – பிரகாஷ்ராஜ் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

விஷால் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, பயபுள்ள படத்தின் தயாரிப்பாளரும், விஷாலின் விசுவாசியுமான மணிமாறன் என்பவர், நிர்வாகக்குழு கூட்டத்தில் விஷாலை எதிர்த்து பேசிய தயாரிப்பாளர் தங்கராஜுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும், அவரை கண்டிக்காமல் விஷால் அமைதிகாப்பதாகவும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதங்கக்குரல் ஒலிக்கிறது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, ஃபெப்சி பிரச்சனையை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து வரும் விஷால், தன்னுடைய அணியினரின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப்போகிறார்?