கேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…! – என்ன செய்யப்போகிறார் விஷால்?

edappadi-vishal

 

தமிழக அரசு தமிழ்த்திரைப்படங்களுக்கு அறிவித்துள்ள 10% கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரைத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்கட்டமாக சென்னையில் உள்ள ஐனாக்ஸ், பிவிஆர் ஆகிய மல்டடிப்ளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன.

சத்யம், அபிராமி போன்ற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஸ்டிரைக்குக்கு உடன்படவில்லை.

அதனால் தியேட்டர்களின் வேலைநிறுத்தம் என்ற ஆயுதம் முனைமழுங்கிப்போனநிலையில், விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ தன்னுடைய எதிர்ப்பில் உறுதியாக இருந்தது.

தமிழக அரசு அறிவித்துள்ள கேளிக்கை வரியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் எந்தவொரு தமிழ்ப்படங்களையும் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.

‘‘தமிழ்த்திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரசி முதல் சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% – 28% ஜி.எஸ்.டி. வரை பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சாபில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை விளக்கங்களை அளித்தோம்.

இத்தனைக்குப் பிறகும்,10% கேளிக்கை வரி விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக தயரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை விலக்கிட வேண்டும். அதுவரை 06-10-17 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை” என்று அறிவித்தது.

கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு சட்டை பண்ணவில்லை.

அதே நேரம், தியேட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு, சுமார் 25 சதவிகிதம் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

தியேட்டர் கட்டணத்தை உயர்த்த சம்மதித்த தமிழ அரசு, கேளிக்கைவரியை நீக்க சம்மதிக்கவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் என்ன செய்யப்போகிறார்?

– ஜெ.பிஸ்மி