சினிமா ஸ்டிரைக் வாபஸ்… – ஆர்.கே.செல்வமணி அறிவிப்புக்குப் பிறகும் அடங்காத புகைச்சல்….

rk-selvamani8_

ஃபெப்சி அறிவித்து, கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் திரைப்படத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஃபெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரைப்படத் தொழிலாளர்களின் சம்மேளனமான ஃபெப்சி அமைப்புக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே சம்பள உயர்வு தொடர்பான பிரச்சனை காரணமாக உரசல் இருந்தது.

எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் ஃபெப்சி நிர்வாகக்குழுவில் உள்ள தனபால் என்ற நபர், விஷாலைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதை அடுத்து, இனி ஃபெப்சி தொழிலாளர்கள் உடன் மட்டுமல்ல மற்ற தொழிலாளர்களுடனும் பணி செய்வோம் என்று அறிவித்தார் விஷால்.

அதன் மறைமுக அர்த்தம்… ஃபெப்சி ஆட்களுக்கு வேலை கொடுக்காதீர்… குறைந்த சம்பளத்துக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு வேலை கொடுங்கள் என்பது.

இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட ஃபெப்சி அமைப்பினர், ஆகஸ்ட் 1 முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்தனர்.

மூன்றாவதாக வேலைநிறுத்தம் தொடரும்நிலையில் நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக முடங்கிப்போன காலா, மெர்சல், கொடிவீரன் உட்பட பல படங்களின் படப்பிடிப்பு நாளை முதல் மீண்டும் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா, ஃபெப்சி தொழிலாளர்களுக்கு பழைய சம்பளம் மற்றும் பேட்டாவைக் கொடுக்க வேண்டாம்.

புரட்யூசர் கவுன்சில் தீர்மானித்தபடி குறைக்கப்பட்ட புதிய ஊதியங்களைத்தான் கொடுக்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் அறிவித்திருக்கிறார்.

சம்பளத்தை உயர்த்திக் கேட்டால், ஏற்கனவே இருந்த சம்பளத்தையும் குறைக்கிறாங்களே என்று ஃபெப்சி தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது.