இந்த சினிமாக்காரங்க எந்த ஊருல இருக்காங்க?

NADIGAR SANGAM CAUVERY PROTEST Stills 166

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக அமைப்பினர் சார்பில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அடையாள கண்டனப் போராட்டத்தில் நான்கு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடாது.

காவிரி நீர் உற்பத்தியாகும் இடங்களையும், சேரும் இடங்களையும் இயற்கை தீர்மானிக்கிறது. அதை சார்ந்திருக்கின்ற மக்கள் இரு மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய விவசாயம் மற்றும் குடிநீர் சார்ந்த வாழ்வாதாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நீர் பிரச்சனை, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியலற்றப் பொதுநோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 25 வருடங்களாகப் பல அரசாங்கங்களால் கையாளப்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் பிரச்சனை. இப்பொழுது ஸ்டெர்லைட் நிர்வாகம் அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கவும் அனுமதி கோரி நிற்கிறது.

இந்த நேரத்தில் அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்களால் பல்வேறு வகையில் பெரும்பாதிப்படைந்துள்ள அப்பகுதி மக்களுக்கும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  உறுதுணையாகத் தமிழக அரசும், திரைத்துறை சார்ந்த நாங்களும் போராடி வருகிறோம்.

மத்திய அரசு இதற்கு செவிசாய்த்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், இவ்வளவு காலம் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையால், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

ஸ்டெரிலைட் விஷயத்தில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு போராடி வருகிறதாம்… இந்த சினிமாக்காரங்க எந்த ஊருல இருக்காங்க?