கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் – சித்ரா லட்சுமணனின் குரலுக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

chitra-lakshmanan-1

 

 

கடந்த எட்டு ஆண்டுகளாக கலைமாமணி விருதுகளை வழங்காமல் கையைக்கட்டிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் வழங்கப்பட்டு வரும் கலைமாமணி விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம். அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்த  வேண்டும் என்ற ஊக்கத்தைக் கலைஞர்களுக்கு தருவது ரசிகர்களின் கைதட்டல்களும், பாராட்டுக்களும், அவர் களது திறமையை அங்கீகரிக்கும்விதத்திலே வழங்கப்படுகின்ற விருதுகளும்தான்.

கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள்  கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும் திரைப்படக் கலைஞர் களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது.

அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை  ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு கலை உலகம் மிகப்பெரிய அளவிலே நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

விருதுகளோடு இணைந்து  சிறந்த தமிழ்த்திரைப் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள்  வாழ்க்கையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.

இந்த விருதுகளைப் போலவே 1959ஆம் ஆண்டிலிருந்து  தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின்  சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகளும் 2011ஆம் ஆண்டு முதல் எந்த கலைஞருக்கும் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கான வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளையும் அன்பு கூர்ந்து உடனடியாக அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கவுரவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்   சித்ரா லட்சுமணன்.

தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய அமைப்புகள் இதுபற்றி பேசாமல் ஊமையாய் இருக்க, அவர்கள் செய்திருக்க வேண்டிய வேலையை சித்ரா லட்சுமணன் செய்திருக்கிறார்.

சித்ரா லட்சுமணனின் குரலுக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?