‘சென்னை 2 சிங்கப்பூர்’ – பாஸ்போர்ட்டை பறிகொடுத்தவரின் படம்

chennai-2-singapore

சிங்கப்பூரைச் சேர்ந்த அப்பாஸ் அக்பர் மனதில் ஆறு வருடங்களுக்கு முன் புள்ளியாய் தோன்றிய கதை, இன்று முழு நீள திரைப்படமாக வளர்ந்து நிற்கிறது.

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தை இயக்கத் தொடங்கினார் அப்பாஸ் அக்பர்.

ஏறக்குறைய 30 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டநிலையில், அதை அப்படியே தூக்கிக்கடாசிவிட்டு, கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலசந்திரன், சிவகேவுவ், கவிதை குண்டர் எம்சி ஜாஸ், சுமித்ரா ஆகியோர் அடங்கிய புதிய கலைஞர்களுடன் மீண்டும் படப்பிடிப்பைத் துவக்கினார்.

காமிக் புக் தயாரிப்பில் உருவாகியுள்ள சென்னை 2 சிங்கப்பூர் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அது மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் அப்பாஸ், இசையமைப்பாளர் ஜிப்ரான் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதன் காரணமாகவே இப்படத்தின் தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டதாக சொல்கிறார் ஜிப்ரான்.

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆர்வத்தில் கடந்த வருடம் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சாலை வழியே சென்னை முதல் சிங்கப்பூர் வரை படக் குழுவினர் பயணம் செய்தார்கள். செல்லும் வழியில் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஒவ்வொரு பாடலையும் வெளியிட்டனர்.

அதனால் என்ன நன்மை விளைந்ததோ, தற்போது இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை முதலில் சிங்கப்பூரில் மட்டுமே படமாக்க நினைத்தாராம் இயக்குநர் அப்பாஸ். ஆனால், சென்னை வந்திருந்த போது அவருடைய பாஸ்போர்ட் தொலைந்து போய்விட, அதனால் சில மாதங்கள் சென்னையிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்போதுதான் இந்தப் படத்தை இங்கேயே எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

‘சென்னை 2 சிங்கப்பூர்’, சிங்கப்பூர் தமிழ்ப் படமாக இல்லாமல் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதை என்ன?

“சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணமாகும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை இது. இந்தப் படம் நிச்சயம் அனைவரையும் ரசிக்க வைக்கும். படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஜாலியான அனுபவம் கிடைக்கும். சமீபத்தில் இந்தப்படத்தை இளைஞர்களுக்குப் போட்டுக் காண்பித்தோம். நாங்கள் என்ன நினைத்தோமோ அந்த ரிசல்ட் அவர்களிடம் இருந்து கிடைத்தது.” என்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.