மெர்சல் பிரச்சனையில் ஒருவழியாக வாய் திறந்தார் விஷால்….

vijay2

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி.க்கு எதிரான வசனங்கள் குறித்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் சர்ச்சையைக் கிளப்பியதோடு, விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக, திரையுலகைச் சேர்ந்த கமல், பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ்குமார் போன்ற வெகுசிலர் மட்டும் கருத்து தெரிவித்தனர்.

மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்த்து வருகின்றனர்.

முக்கியமாக நடிகர் சங்கத்தின் செயலாளர், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் இது பற்றி வாயைத் திறக்கவில்லை.

மெர்சல் படத்தின் தலைப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில் கருணாஸ் உடன் இணைந்து விஜய்க்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு விஷால் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

அதை உண்மையாக்குவதுபோல், மெர்சல் படத்துக்கு பா.ஜ.க. தரும் குடைச்சல் பற்றி வாயைத்திறக்காமலே இருந்தார் விஷால்.

இந்நிலையில், இதுபற்றி தற்போது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் விஷால்…

“மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது?

சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.

தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது.”

என்று தெரிவித்துள்ளார் விஷால்.

நல்லவேளை…. இப்பவாவது தன் கருத்தைச் சொன்னாரே…