‘எச்சை’யை தட்டிக்கேட்காதது ஏன்? பிக் பாஸ் கமலுக்கு கண்டனம்…

bigboss2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘எச்சை’ ‘பண்ணாட’ ‘சண்டாளா, சண்டாளா’ போன்ற சொற்கள் மிகச் சாதாரணமாக புழங்குகின்றன.

குறிப்பாக, நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் எச்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் கமல்ஹாசன், அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள், உரையாடல்கள் பற்றி விமர்சனம் செய்கிறார்.

சிலரை பாராட்டவும்… சிலரை கண்டிக்கவும்.. செய்கிறார்.

ஆனால் சக போட்டியாளரான நடிகை ஓவியாவை எச்சை என்று திட்டிய காயத்ரிரகுராமின் செயல் பற்றி கமல்ஹாசன் கண்டுகொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. காயத்ரி ரகுராம் கமல்ஹாசனின் நண்பரான மறைந்த நடன இயக்குநர் ரகுராமின் மகள் என்பதை நினைவில் கொள்க.

இந்நிலையில் மற்றொரு தினத்தில் சக போட்டியாளரைப் பற்றி குறிப்பிடும்போது சேரி பிஹேவியர் என்ற சொல்லை பயன்படுத்தினார் காயத்ரி ரகுராம்.

இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவரான வன்னியரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்…

“சேரி பிஹேவியர் என்று ஒரு நடிகை இன்னொரு நடிகையை சொல்லியுள்ளார்.

எதையாவது பரபரப்பாக பேசி தொலைக்காட்சியின் ரேட்டிங்கை ஏற்றுவது அல்லது நிகழ்ச்சியை பெரிதாக விளம்பரப்படுத்துவது என்பது மலிவான- கேவலமான உத்தி.

நடிகர் கமலகாசன் முற்போக்காளர்-பகுத்தறிவாளர் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளுகிறார்.

அவர் நெறியாளுகை நடத்தும் அந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு உரையாடல் இருக்கிறது என்பதை தெரிந்தே அதை ‘promo’ போடுவது-அதை அனுமதிப்பது என்பது நடிகர் கமலுக்கு அழகல்ல.

அந்த மலிவுக்கு ஒத்துப்போவதாகதான் பொருள்! கமலின் இந்த போக்கு அந்த நடிகையின் (காயத்ரி) போக்கை விட மோசமானது.

இது ஒரு புறம் இருக்க, சேரிபிஹேவியர் என்பது தமிழ் சமூகத்தின் மிக சிறந்த பண்பாடு என்பது பெருமைக்குரிய விடயம். இன்னமும் தமிழ்மொழி அங்கே தான் மிச்சமிருக்கிறது. சேரியில் தான் இன்னமும் கூட்டுக்குடித்தனம் இயங்கி கொண்டிருக்கிறது. சேரியில். தான் இன்னமும் சகிப்புதன்மை இருக்கிறது. சேரியில் தான் இன்னமும் மனிதநேயமும் இரக்க குணமும் பரவி கிடக்கிறது. இப்படிப்பட்ட பிஹேவியர் அக்ரகாரத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.

அக்ரகாரத்தில் மட்டுமல்ல ஆதிக்க சமூகங்களிடமும் கூட இல்லை.

சேரி என்றாலே சேர்ந்து வாழ்தல், கூடி வாழ்தல் என்பது தான் பொருள்.

ஆகவேதான் சேரி பண்பாடு தமிழர்களின் மூத்த பண்பாடு என்று வரலாறு நமக்கு சொல்லித்தந்துள்ளது.

இந்த பண்பாட்டை அக்ரகாரங்களும் அதன் அடிமை சாதிகளும் சீர்குலைக்க பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

உதாரணத்திற்கு “பற புத்தி அர புத்தி” என்று கிண்டலடிக்கின்றனர். அதாவது பறையர்களின் புத்தி அரைகுறையானதாம். ஆனால், நமது முன்னோர்கள் பவுத்த வழி வந்தவர்கள் “பறையர்களின் புத்தி என்பது அறம் சார்ந்த புத்தி” என்பதைத்தான் சாதியவாதிகள் பற புத்தி அர புத்தி என்று திரித்து பரப்புரை செய்து வருகின்றனர்.

ஆகவே தான் இந்த மலிவான விளம்பரத்திற்கு நாம் பலியாகிடக்கூடாது.

நாம் எப்போது கோபப்படவேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

நாம் எப்போது யுத்தக்களத்துக்கு போக வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அவாள்களும் அவாள்களின் அடிமைகளான சாதி இந்துக்கள் அல்ல.

ஆகவே, உணர்ச்சி வசபடாமல் நாம் களமாடி பயணத்தை தொடருவோம்!

அந்த நடிகைக்கு பின்னால் இருக்கிற கார்பரேட்கள், சாதியவாதிகள், முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு அலையும் கமல் போன்றவர்களை அம்பலபடுத்துவோம்.”