பயமா இருக்கு – விமர்சனம்

bayama


கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டிவைத்த ‘பேய் சீசன்’ உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டு, ஏறக்குறைய ‘பேய் சீசன்’ முடிந்துபோனநிலையில் டிரெண்டுக்குப் பொருந்தாமல் திரைக்கு வந்திருக்கிறது – பயமா இருக்கு.

பாழடைந்த பங்களா… அதனுள் ஒரு பேய்… அந்த பேய்க்கு ஒரு முன்கதை என்கிற வழக்கமான பேய்ப் படங்களின் டெம்ப்ளேட்டிலிருந்து கொஞ்சமும் விலகாத திரைக்கதை.

தன்னுடைய மனைவி ரேஷ்மிமேனனின் பிரசவக்காலத்தில் அவருடைய அம்மாவும் கூட இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஹீரோ சந்தோஷ்.

அவரைத்தேடி தேடி இலங்கைக்கு போய்விட்டு நான்கைந்து மாதங்கள் கழித்து திரும்பும் சந்தோஷ், ரேஷ்மி மேனனைத்தேடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.

இலங்கையிலிருந்து வரும்போது தன்னுடைய நண்பர்களான ஜீவா, ஜெகன், பரணி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரையும்அழைத்துக் கொண்டு வருகிறார்.

ஊரில் உள்ளவர்கள் ரேஷ்மிமேனனை பேய் என்று சொல்கிறார்கள்.

சந்தோஷ் உடைய நண்பர்களான ஜீவா, ஜெகன், பரணி, மொட்டை ராஜேந்திரனும் அதையே சொல்ல, குழப்பத்துக்கு ஆளாகிறார் சந்தோஷ்.

ரேஷ்மி மேனனுக்கு என்ன நடந்தது?

அவரை ஊர்க்காரர்கள் பேய் என்று சொல்வது உண்மையா?

என்பதற்கான விடைதான் ‘பயமா இருக்கு’.

ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் பயமுறுத்தி இருந்தாலும், தலைப்பில் உள்ள ‘பயம்’ படத்தில் இல்லாமல்போனதுதான் பரிதாபம்.

பின்னணி இசையையும் ஒளிப்பதிவையும் வைத்து பயமுறுத்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஓரளமே பலன் கிடைத்திருக்கிறது.

ஜீவா, ‘பிக்பாஸ்’ புகழ் பரணியையும் அநியாயத்துக்கு வீணடித்திருக்கிறார்கள். ‘நண்டு’ ஜெகன் ஓரளவுக்கு சிரிக்க வைக்க செய்த முயற்சி கை கொடுக்கவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல்… மொட்டை ராஜேந்திரன்தான்.

படம் முழுக்க மொட்டை ராஜேந்திரனின் கொடிதான் உயரப்பறக்கிறது.

கோவை சரளாவை சகித்துக் கொள்ள பெரிய மனசு வேண்டும்.

பயமாக இருக்கு படத்தை ஹாரர் காமெடி படமாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஹாரரே காமெடியாகிவிட்டிருக்கிறது.