பாகுபலி-2 பிரச்சனை தீர்ந்தது… விஷால் இல்லாமலே பறந்தது வெற்றிக்கொடி…

baahubali2d

ஷ்… அப்பாடா…

கடந்த சில  நாட்களாக பரபரப்பாக நடந்து வந்த பாகுபலி – 2 படத்தின் பஞ்சாயத்து ஒருவழியாக சற்று முன் முடிவுக்கு வந்தது.

முடிவு தெரியாமல் நீண்டுகொண்டேபோன பஞ்சாயத்து, மாரீஸ் ஹோட்டலில் இருந்து போலீஸ் கமிஷ்னர் ஆபிஸுக்கு இடம் பெயரக்கூடிய சூழல் உருவானது.

அதன் தொடர்ச்சியாய் ‘ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ்’ சரவணன் சிறைக்கு செல்லக்கூடிய ஆபத்தும் உருவானது.

அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, சரவணன் மீது  போலீஸில் புகார் கொடுக்க துடித்துக் கொண்டிருந்த கே புரடக்ஷன்ஸ் ராஜராஜனை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தினர்.

அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால், இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துவிடக்கூடாது என்பதில் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் குறிப்பாக, அருள்பதி உறுதியாக இருந்தார்.

விஷால் இந்தப் பிரச்சனைக்குள் வரக் கூடாது என்றும், ஒருவேளை விஷால் வர நேர்ந்தால் வழக்கம்போல் பெயரை தட்டிச் சென்றுவிடுவார் என்பதாலும், இன்றைக்குள் பஞ்சாயத்தை முடித்துவிட வேண்டும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தவிர, பாகுபலி-2 ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் இனியும் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டிருந்தால் படம் ரிலீஸ் ஆகாமல்போய்விடும் ஆபத்து இருந்தது.

இதை அனைவருமே புரிந்து வைத்திருந்ததால், தங்களுக்கு ஏற்படும் ‘சேதாரங்களை’ ஏற்றுக் கொள்ளவும் தயாராகினர்.

தற்போதைய சூழலில் பாகுபலி-2 படத்தின் ரிலீஸுக்கு தடைக்கல்லாக இருந்தது, கே புரடக்ஷன்ஸ் ராஜராஜனுக்கு ‘ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ்’ சரவணன்  கொடுக்க வேண்டிய 17 கோடி ரூபாய்தான்.

அந்தப் பணத்தை சரவணனால் கொடுக்க முடியாமல்போனதால்தான் பஞ்சாயத்து.

கடைசியாக,  சரவணன் கொடுக்க வேண்டிய 17 கோடியில் 10 கோடியை கே புரடக்ஷன்ஸ் ராஜராஜன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் தீர்ப்பு அளித்தனர். இதை ஏற்காவிட்டால் தனக்கு இன்னும் நஷ்டம் வரும் என்பதால் வேறு வழியே இல்லாமல் 10 கோடியை விட்டுத்தர ஒப்புக்கொண்டார்.

பாக்கி ஏழு கோடி ரூபாயை, பாகுபலி-2 படத்தை வாங்கிய ஏழு ஏரியாக்களின் விநியோகஸ்தர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பாகுபலி- 2 படம் கல்லாப்பெட்டியை கரன்சிகளால் நிறைக்கப்போகிறது என்ற கனவில் இருக்கும் விநியோகஸ்தர்கள், லாபத்தில் நஷ்டம் என்ற அடிப்படையில் ஏழு கோடியை கூடுதலாக கொடுக்க சம்மதித்துள்ளனர்.

இதன் மூலம் பாகுபலி- 2 படத்துக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்தது.

ஜெ.பிஸ்மி