காதலர்கள், கள்ளக்காதலர்கள், தம்பதிகள் கவனத்துக்கு….

xvideostamilmoviestills-14

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற படநிறுவனம் தயரித்துள்ள படம் – “எக்ஸ் வீடியோஸ்”.

கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் நடைபெற்றுள்ளது.

தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ள இந்தப்படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.

ஐடி துறையில் இருக்கும் இளைஞர்கள் ஜாலியாக பொழுது போக்காக த்ரில்லுக்காகச் செய்யும் செயல்கள் செல்லும் விபரீதமான பாதையை படம் எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.

புதுமுக நடிகர் அஜய்ராஜ், நிஜய், ஷான், பிரபுஜித், விஷ்வந்த், அர்ஜுன், அபினவ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஆக்ருதி சிங் நடித்துள்ளார். பல நடிகைகள் நடிக்க மறுத்து கடைசியாக இவர் தைரியமாக நடித்துள்ளாராம்.

எக்ஸ் வீடியோ படத்தைப் பற்றி இயக்குநர் சஜோ சுந்தர் என்ன சொல்கிறார்?

“என் படத்துக்கு எக்ஸ் வீடியோஸ் என்று பெயர் வைத்திருப்பதை வைத்து ஆபாசப்படம் என்று நினைத்து விட வேண்டாம். எக்ஸ் என்பது தவறு (Wrong) என்று அர்த்தம் கொள்ளும் வகையில்தான் தலைப்பு வைத்துள்ளேன்.

உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணையதளங்கள் பற்றிப் பேசுகிற படம் இது. அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாஃபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச் சொல்கிற படம். ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரத்தில் ஊடுருவி அவனது நிம்மதியைக் குலைக்கும் ஆபத்தைச் சொல்கிற படம் ” என்று எச்சரிகை மணி அடிக்கத் தொடங்கும் இயக்குநர் தொடர்ந்து சொன்னார்…

“இன்று பரவி இருக்கிற செல்ஃபி மோகம் எந்தளவுக்கு விபரீதமானது என்று தெளிவுபடுத்துகிறது கதை. காதலர்கள், கள்ளக்காதலர்கள், தம்பதிகள் தங்களுக்குள் உணர்ச்சி வேகத்தில் எடுத்துக் கொள்ளும் வீடியோக்கள் எந்தளவுக்கு அபாயகரமானவை என்று படம் எச்சரிக்கிறது.

இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும். ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்தான் இப்படம் உருவாகியிருக்கிறது.’’ என்கிறார் இயக்குநர்.

அதற்காக இப்படியா படத்துக்கு ஆபாசமாகத் தலைப்பு வைப்பது?

“இன்று திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வருவதே சிரமமாக இருக்கிறது. குறைந்தபட்ச ரசிகர்களை இழுக்கவாவது இந்தக் தலைப்பு உதவலாமே. கிளு கிளுப்பான எண்ணத்துடன் நுழைபவனுக்குக் கூட நல்ல பாடத்தைச் சொல்லியனுப்பும் இந்தப் படம். இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாகக் கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ”

நம் கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்டமான சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம்தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும். இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் எக்ஸ் வீடியோஸ்.”

இந்தப் படத்தைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெண் பிரபலங்களுக்கான பிரத்யேகக் காட்சியும் திரையரங்குகளில் முதல் காட்சியைப் பெண்களுக்கென்றும் திரையிட திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் சஜோசுந்தர். இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், ‘பொம்மரிலு’ பாஸ்கர் ஆகியோரிடமும் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படத்தைப் பார்த்த இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நல்லதொரு சமூகத்திற்கு தேவையான கருத்தை விதைத்துள்ளீர்கள் என்று வெகுவாகப் பாராட்டியதோடு இயக்குநர் சஜோசுந்தரை வாழ்த்தியுள்ளார்.

எக்ஸ் வீடியோ படம் மே மாதம் வெளியாகவுள்ளது.