நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படம் வரக்கூடாது…! – மறைமுகமாக வேலைபார்த்த ஸ்லீப்பர் செல்கள்

aramm

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ படம் வருகிற 10-ஆம் தேதி வெளியாகிறது.

அறம் படத்தை தன்னுடைய மானேஜர் ராஜேஷ் பெயரில் நயன்தாராவே தயாரிப்பதாக படத்துறையில் செய்திகள் பரவியநிலையில், அதை உண்மையாக்குவதுபோல் அறம் படத்தின் புரமோஷனுக்காக சன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நயன்தாரா.

எனவே அறம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நயன்தாரா ஒருவேளை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், நாம் எதிர்பார்த்ததுபோலவே நயன்தாரா வரவில்லை. தயாரிப்பாளர் ராஜேஷும் வரவில்லை.

இயக்குநர் கோபி நயினார் மட்டுமே அறம் படத்தைப் பற்றி பேசினார்…

‘‘இந்த படத்தை இயக்குவதற்கு முன் எனக்கு ஒரு பிரச்சனை (கத்தி படத்தின் கதை விவகாரம்)ஏற்பட்டது. அந்த பிரச்சனையின்போது எனக்கு நிறைய பத்திரிகையாளர்கள் ஆதரவாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் எல்லாம் எனக்குக் கொடுத்த அறிமுகம்தான் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தேடிக் கொடுத்தது.

சினிமாவில் அவ்வளவாக அறிமுகமில்லாதவனாக இருந்த நான் அந்த பிரச்சனைக்குப் பிறகுதான் சினிமாத்துறையிலுள்ள பலருக்கும் நான் அறிமுகமானேன்.

இயக்குநர் சற்குணம் சார் அலுவலகத்திற்கு நான் அடிக்கடி போவேன். அப்படி ஒரு நாள் போனபோது அவருடைய நண்பர் சௌந்தர் சார் எனக்கு அறிமுகமானார்.

அவர்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கும் ராஜேஷ் சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

முதலில் அவர் ஒரு ஐந்து நிமிடம் இந்த கதையை கேட்டார். பிறகு என்னை நயன்தாரா மேடத்திடம் கதையை சொல்லச் சொன்னார்.

நயன்தாரா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் கதையை கேட்டதும், ‘இந்த கதையை நாம பண்றோம், வேலைகளை உடனே ஆரம்பியுங்கள்’ என்று சொன்னார்.

நயன்தாரா மேடம் இந்த கதையில் நடிப்பதான தகவல் வெளியில் தெரிய வந்ததும், சில பேர் இந்த கதை திரைப்படமாகக்கூடாது என்று வேலை செய்தார்கள். ஆனால் நயன்தாரா மேடம் இந்த கதையை படமாக பண்ணுவதில் ரொம்பவும் உறுதியாக இருந்தார்.

இப்படிதான் ராஜேஷ் சார் தயாரிப்பில், நயன்தாரா மேடம் நடிப்பில் அறம் படம் உருவானது.

இந்த படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரை நயன்தாரா மேடம் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த படம் வெற்றிப் படமாக அமைகிறதோ, இல்லையோ நீங்கள் ஒரு இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்!

அப்படி படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரையிலும் அவர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளார்.”

என்ற கோபி நயினார், “எனக்கு பிரச்சனை வந்தபோது உதவிய பத்திரிகையாளர்களும், நயன்தாரா மேடமும் இல்லை என்றால் நான் இயக்குநராகி இருக்க மாட்டேன்’’ என்றும் நெகிழ்ச்சியுடன் சொன்னார்!

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் சுனுலட்சுமி, ராம்ஸ், ரமேஷ், விக்னேஷ், தன்ஷிகா, வேலா ராமமூர்த்தி, ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அறம் வெற்றிப்படமாக இருக்கிறதோ இல்லையோ…. சமூகநலனில் அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படமாக இருக்கும்.

-ஜெ.பிஸ்மி