லஞ்ச புகார் கூறிய அங்குசம் இயக்குநர் மீது அவதூறு வழக்கு – லோக் சத்தா கட்சி கண்டனம்

Director Manukannan 0111

தகவல் பெறும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘அங்குசம்’ திரைப்படத்தை இயக்கிய மனு கண்ணன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதை லோக் சத்தா கட்சி கண்டித்திருக்கிறது.

இது பற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

மனு கண்ணன் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவின் மீது ஒரு மாத காலத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. வணிக வரித்துறை அமைச்சரின் உதவியாளர் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்க 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக மனு கண்ணன் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் லோக் சத்தா கட்சி சார்பில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் முடிவை விரைவில் பரிசீலிக்குமாறு ஒரு இணையதள விண்ணப்பமும், இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவலும் கோரப்பட்டன. அதற்கு அடுத்த நாளே திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. எனினும் அவர் மீது அவதூறு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்கு இயற்கை நீதி கொள்கைகளுக்கு எதிரான ஒன்று. லஞ்ச ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவர் மீது வழக்கு தொடுத்து, அவர் குற்றம் சாட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அரசின் இந்த போக்கு நகைப்புக்குரியது. மனு கண்ணன் குற்றம் சாட்டிய வணிக வரித்துறை அமைச்சர் மற்றும் அவரின் உதவியாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று லோக் சத்தா கட்சி கோருகிறது. அந்த விசாரணை முடிந்த பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மற்றும் லஞ்சம் ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான சமூக ஆர்வலர்களுக்கும் லோக் சத்தா கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்த நேரத்தில் நினைவுபடுத்த விழைகிறோம். மேலும் தகவல் உரிமை சட்டத்தை சாமானிய மக்களிடையே கொண்டு சென்று அவர்களை அதிகாரப்படுத்தும் எனவும் லோக் சத்தா கட்சி உறுதி கொள்கிறது. அரசியல் கட்சிகளும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்ற தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கிணங்க தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோரை நியமித்த முதல் அரசியல் கட்சி என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.