ஆயிரத்தில் இருவர் – விமர்சனம்

aayirathil-iruvar-stills-032

அமர்க்களம், பார்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என ஏகப்பட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த சரணின் படம்.

முன்னணி ஹீரோக்கள் அவரை கைவிட்டநிலையில், வினய்யை வைத்து ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருக்கிறார்.

இரட்டையர்களாகப் பிறந்து சின்ன வயதிலிருந்தே ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடன் வளரும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை.

தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே சண்டையிட்டுக்கொள்ளும் அளவுக்கு (யப்பா… என்னா கற்பனை?) இருவருக்கும் ஏழாம்பொருத்தம்.

குடும்பத்தினரோடு கன்னியாகுமரிக்கு செல்லும்போது அங்கு கதாநாயகி ஸ்வஸ்திகாவை பார்த்ததும் அவர் பின்னாடியே சென்று விடும் செந்தட்டிக்காளை (வினய்), அந்தப் பெண்ணின் மீதான காதலால், ஆந்திராவிலேயே செட்டிலாகிவிடுகிறார்.

திருநெல்வேலியில் இருக்கும் செவத்தக்காளை (வினய்) வேலைவெட்டிக்கு போகாமல், திருட்டு வேலைகளை செய்வதோடு, சொத்தில் பங்கு கேட்டு தொந்தரவும் கொடுத்து வருகிறார்.

இந்த சூழலில் ஊரில் சொத்து இருப்பதை அறிந்து ஆந்திராவில் இருந்து ஊருக்கு வருகிறார் செந்தட்டிக்காளை.

அங்கு நடக்கும் ஆள்மாறாட்டமே… ஆயிரத்தில் இருவர் என்று சுலபமாக சொல்லிவிடமுடியாத அளவுக்கு திரைக்கதையில் அநியாயத்துக்கு குழப்பம்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கிளைக்கதைகள்.

அவர் யாரு… இவர் யாரு…. அவருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் என்று புரிந்துகொள்வதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

பிரதானக்கதைக்கு சம்மந்தமே இல்லாமல்… அருள்தாஸ் டிராக். ஆனாலும் அருள்தாஸின் காமெடிதான் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

கதாநாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மயில்சாமியும் வழக்கம்போல் சிரிக்க வைத்திருக்கிறார்.

இரண்டு வேடங்களில் வினய். தோற்ற வித்தியாசம், பாடி லாகுவேஜ் என எவ்வித மெனக்கெடலும் இல்லாமல் நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளும் கவனத்தை ஈர்க்கவில்லை.

பரத்வாஜ் இசையில் பாடல்களையும், பின்னணி இசையையும் ஓரளவுக்கே ரசிக்க முடிகிறது.

கிருஷ்ணா ரமணனின் ஒளிப்பதிவில் விஷேசமாக ஏதுமில்லை.

புதுமையான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, பாலசந்தரின் டச்சோடு எத்தனையோ வெற்றிப்படங்களைக் கொடுத்த சரணின் படமா இது? என்ற சந்தேகத்தை பலமாக எழுப்ப வைத்திருக்கிறது – ஆயிரத்தில் இருவர்.