கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் பெயர் – அனேகன். அர்த்தம் தெரிந்து கொள்ள திருவாசகம் படிக்கணுமாம்!

kv anandh_1553_0

அருஞ்சொற்பொருள் தேடும் அளவுக்கு தன் படங்களுக்கு தலைப்பு வைக்கும் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படத்துக்கு அனேகன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
அர்த்தம் என்ன ஸார்?
அனேகன் என்றால் ஒன்றானவர், உருவில் பலரானவன் என்று பொருள். நமச்சிவாய வாழ்க… என்று துவங்கும் திருவாசகப் பாடலின் கடைசிவரியில்.. “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க..” என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.
– என்று விளக்கம் சொல்லும் கே.வி. ஆனந்த் ஏற்கனவே கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் ஆகிய படங்களை இயக்கியவர்.
அனேகன் படத்தில் தனுஷ் ஹீரோ. தவிர முன்னாள் ஹீரோ கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ராவணன்’ படத்திற்குப் பிறகு கார்த்திக் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.
ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இரட்டை எழுத்தாளர்கள் சுபா, கே.வி.ஆனந்துடன் இணைந்து இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள்.

காதலும், நகைச்சுவையும், சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில், தனுஷ் இதுவரை நடிக்காத தோற்றங்களில் நடிக்கிறார்.
வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலிவியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
மாற்றான் உட்பட பல வெற்றிப் படங்களையும், தற்போது ஐந்து தமிழ்ப் படங்களைத் தயாரித்து வரும் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.